பக்கம் எண் :

166கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

உள்ளும் மனிதனைநான் ஒரிடத்துங் காண்கிலனே’
என்று விடையிறுத்தார் எல்லாந் தெரிகிழவர்;
ஒன்றுங் கதையிதனுள் உண்மைப் பொருளென்ன?
கட்டுடலுங் கைகாலும் கண்ணும் பிறவுறுப்பும்
மட்டும் உடையானை மாந்தன் எனப்புகலார்;
ஒப்பிலா நல்மனமாம் ஒருறுப்புக் கொண்டவனே
இப்புவியில் வாழ்மனிதன் என்றுரைக்கத் தக்கவனாம்;
பட்டுடையும் வானுயர்ந்த கட்டமும் எக்காலும்
தட்டறியாச் செல்வமுடன் மற்றுமுள எப்பொருளும்
பெற்றவனை நாகரிகம் பெற்ற மனிதனெனச்
சொற்றவரைக் கண்டதில்லை; துய்ய அகத்துறுப்பா
அன்புமுதற் பண்புகட் காளாகி நின்றானே
மன்பதையுள் போற்றும் மனிதன் எனப்படுவான்;
பண்புமனம் அற்றவரே பார்முழுதும் ஈண்டிவிட்டார்
பண்புமனம் கொண்டவரைப் பார்த்தல் அரிதாகும்
என்னுங் கருத்தை எடுத்து விளக்குவதே
முன்னங் கதையின் முழுமைப் பொருளாகும்;
தென்னாட்டு முன்னோர் திணையிரண்டு சொல்லிவைத்த
பண்பாட்டை எண்ணிப் பகுத்துணர நாம்மறந்தோம்,
மக்கள் உயர்திணையாம்; மாண்பார் உயர்ஒழுக்கம்
மிக்கமையால் அத்தகுநல் மேன்மைநிலை பெற்றார்கள்,
தேன்தமிழில் அந்தத் திணையென்னுஞ் சொல்லுக்குள்
ஆன்ற பொருள்ஒழுக்கம்; அவ்வொழுக்கம் இல்லாரேல்
மக்கள் நெடிலாகி மாக்கள் எனவாகித்
தக்க நிலையின்றித் தாழ்ந்த திணையாவர்;
மக்கள் வடிவொன்றால் வாய்க்கா துயர்திணைதான்
மக்கள் இயல்பதுதான் மாண்பார் உயர்திணையாம்
என்னுங் கருத்தை இலக்காக்கி வாழ்ந்தோமா?