இன்னும் மனிதரெனும் பேரால் இயங்குகிறோம்; விண்ணிற் பறக்கின்றோம் வெற்றி சிறக்கின்றோம் எண்ணிற் பெருமைஎலாம் எண்ணில் அடங்காவே! ஆழ்புனலில் மூழ்குகிறோம் ஆங்கெழிலா நீந்துகிறோம் சூழ்பெருமை அத்தனையும் சொல்லுக் கடங்காவே! என்று பறைசாற்றி எக்களித்து நிற்கின்றோம். நன்றுநன் றென்றாலும் நாணும் நிலையுளோம்; நம்மிற் பறவையினம் நன்றே பறப்பதுண் டிம்மி யளவும் இரும்புனலில் நீந்துவதில் மீனிற் சிறக்கவிலை மேன்மை நமக்கேது? வானிற் படுதோல்வி! வார்புனலில் அத்தோல்வி! விண்ணகத்தும் நீரகத்தும் வெற்றி இலைஎனினும் மண்ணகத்து வெற்றிஎதும் வாய்த்ததுவோ? வாயில்லை; காட்டில் விலங்கினமுங் கண்டபடி தானடக்கும் நாட்டில் திரிகின்ற நம்நடையும் அப்படியே; நல்ல நடையுண்டா? நம்நடையில் செம்மையுண்டா? இல்லை பொலிவுண்டா? ஏனோ முடமானோம்? கற்கின்றோம் நூல்கள் கசடறவே, கற்றவணம் நிற்கின்றோம் என்றுரைக்க நீதியுண்டா? நன்கு நடக்காமல் நிற்கின்றோம்; நாவன்மை கொண்டோம் அடுக்காத தீச்செயல்கள் ஆயிரமே செய்தாலும் மூடி மறைப்பதற்கே முன்கற்ற கல்வியிலே தேடி அலைந்து தெரிவிப்போம் சான்றுகளும்; கற்றார், பழிக்குக் கடுகளவும் நாணவிலை; மற்றார் அதற்கு மனங்கூசி நிற்பர்; உரிமை உரிமைஎன்றே ஒயாமற் சொல்லி மருவும் உரிமை மனிதர்பொதுச் சொத்தாக எண்ணா தலைகின்றோம் ஏய்த்துத் திரிகின்றோம் |