முற்றவும் வீணே யாக்கி முழுமதி தேய்த்து விட்டாற் பிற்றைநாள் வாழ்க்கை தன்னைப் பேரிருள் கவ்வு மன்றே? படித்திட வந்த நீவிர் பண்பினை மறந்து விட்டுக் குடித்திடக் கற்றுக் கொண்டீர் உரைக்கவுங் கூசு கின்றேன் மடத்தினில் வீழ்ந்து நாளும் மயங்கியே திரியும் நும்மைத் தடுத்திட வில்லை யென்றால் தறிகெட்டுப் போகும் நாடு. திரிபறக் கற்றுப் பின்னர்த் தெளிந்தநல் லறிவு பெற்று மருவிய பணிக ளேற்றும் மற்றவர் வணிகஞ் செய்தும் அரசியல் சார்ந்தும் நாளை ஆள்பவர் பழுது பட்டீர் திரிதருந் தேரின் அச்சு தெறித்திடின் நிலையென் னாகும்? அடித்தளம் சிதையு மாகின் ஆங்கொரு மண்ட பந்தான் படைத்திட யாரால் ஒல்லும்? பண்பினை மறந்தே ஆடும் தடித்தனம் தவிர்ப்பீர் இன்றே நுங்கடன் தலைமேற் கொள்வீர் நடைப்பிண மல்ல நீவிர் நாட்டினைக் காக்கும் வீரர். |