பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்171

நாட்டரசன் வேத்தவையில் நண்ணித் தமிழ்வளர்த்தான்;
கூட்டரசு கொண்டிலங்கு கோமான் சடையப்பன்
காட்டியநல் லன்பால் கலைக்கோவில் ஒன்றெடுத்தான்;
*நாட்டரசன் கோட்டை நகர்விடுத்துத் தென்பாண்டி
நாட்டரசன் கோட்டை நகரடைந்தான்; அப்பதியில்
கம்பன் கதைமுடித்தான் காயச் சுமைவிடுத்தான்;
நம்பன் புகழ்நிற்க நண்ணினான் கல்லறைக்குள்;
சாவேந்திப் போய்விட்ட சான்றோன், கவியுலகிற்
பாவேந்தன் என்றுரைத்த பாட்டாளி, இவ்வுலகைக்
காண நினைந்தின்று கம்பன் வருவானேல்
நாணம் மிகக்கொண்டு நம்மை நகைப்பானே!
மாந்தர் உருவுடையார் மானஞ் சிறிதுமிலார்
போந்து புரிகின்ற புன்மையெலாங் காணின்
மகிழ்வானோ? அன்றி மனமுவந்து நெஞ்சாற்
புகழ்வானோ? சற்றே புகலுங்கள் பொய்வேண்டா;
நம்பவா சொல்கின்றீர்? நம்செயலைக் கண்டவுடன்
வெம்புவான் வெம்புவான் வெம்பியே நொந்திடுவான்;
ஆயிரம்பல் லாயிரமா ஆக்கிவைத்த பாக்கடலுள்
போயிறங்கி முக்குளித்துப் புத்தம் புதுச்சுவையை
மாந்திக் களித்தோர் மதிமயங்கி அக்கடலுள்
நீந்திக் குளித்ததற்பின் நீள்கரையில் ஏறாமல்
அந்தச் சுவைமயக்கில் ஆழ்ந்து திளைத்தவராய்ச்
சொந்தக் கவிபுனைந்து சொல்லரசன் கம்பன்றன்
பாட்டுக்குள் ஏற்றியே பாடிக் களித்தார்கள்;
**கேட்டுக் கவிகளைத்தான் கேட்டுப் புலவனிவன்
வெம்பா திருப்பானோ? வெம்புவான் வெம்புவான்
அம்மா அவன்வெம்பும் வேதனைக்கோ ரெல்லையிலை:


* நாட்டு அரசன் கோட்டை நகர் விடுத்து - நாட்டை ஆளும் அரசனுடைய கோட்டை சூழ்ந்த நகரை நீங்கி. **கேட்டுக் கவிகள் - கெட்ட கவிதைகள்