பக்கம் எண் :

174கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கொடுப்பாரும் அப்பொருளைக் கொள்வாரும் இல்லா
மிடுக்கான ஓருலகம் வேண்டும் எனவெண்ணிக்
காதையொன்று கண்டான் கனவொன்றுங் கண்டானிங்
கேதொன்றுங் காணவிலை இன்றுவந்த நம்கம்பன்
தீது மிகக்கண்டான் தேவையிலா வேற்றுமைகள்
மோதி வரக்கண்டான் மூச்செறிந்து வெம்புகிறான்;
பெண்மைக் குயர்வுதரப் பேணி மதிப்பளிக்கக்
கண்ணுக் கிணையாக் கருதிவர எண்ணிச்
சிறையிருந்தா ளேற்றத்தைச் செப்பினான் கம்பன்
நிறைமிகுந்த பெண்டிர் நெறிபிறழ்ந்து செல்வதையும்
நாகரிகப் பேரால் நடமாடிச் சீர்குலைந்து
வேகமுடன் பாழ்நிலைக்குள் வேண்டிப் புகுவதையும்
ஆடைக் குறைப்பென் றலங்கோலஞ் செய்வதையும்
மேடைப் பொருளாகி மேல்மினுக்கித் தாழ்வதையும்
காணுங்கால் நம்கம்பன் கண்பொத்தி நின்றிடுவான்;
நாணம் எனுமொன்றை நாடே வெறுத்ததென
வேடன்கைப் புள்ளேபோல் வெம்பியே போய்விடுவான்
நாடுபுகழ்க் கம்பன் நலிந்து

கம்பர் விழா திருமலைராயன்பட்டினம்
16.4.1967