29 பாரதி கண்ட பெண்ணுரிமை நாட்டுணர்வு மூட்டி நரம்பில் முறுக்கேற்றிப் பாட்டுணர்வைத் தீட்டிப் படைவலிமை காட்டியவன், பாரதியாய்ப் பாவலனாய்ப் பார்புரக்குங் காவலனாய்ச் சீரதிகம் கொண்டிலங்குஞ் செம்மலவன், ‘இந்நாட்டை யாரடிமை கொண்டான்?’ எனக்கனன்று நோக்கியவன் பேரறிவால் ஓருண்மை பேசுகின்றான், மானிடரே! வீட்டடிமை நீக்காமல் நாட்டடிமை போக்கவரின் ஏட்டளவில் நிற்குமலால் எள்ளளவும் நன்மையிலை; பெண்ணை மிதித்துவிட்டு மண்ணை மதித்தெழுந்தீர்! கண்ணை யிழந்தபினர்க் காட்சியிலே ஏதுபயன்? மண்ணுரிமை வேண்டுமெனில் பெண்ணுரிமை வேண்டுகநீர் கண்ணிரண்டில் தாழ்வுயர்வு காட்டல் முறையாமோ? பட்டங்கள் ஆள்வதுவும் சட்டங்கள் செய்வதுவும் மட்டவிழும் கோதையர்க்கு மட்டும் விலக்காமோ? கூர்த்த மதியுடைமை கோதையர்க்கும் உண்டிங்கே யார்க்கும் இளைப்பில்லை எத்துறைக்கும் நேர்நிற்பர்; பூத்தொடுக்கும் மெல்விரலால் போர்தொடுப்பர்; பூவுலகம் ஏத்தெடுக்கச் செங்கோல் எடுத்திருப்பர் ஆமாம்; அடுப்பிற் குழலூதும் அவ்வாயால் மூங்கில் கொடுக்குங் குழலூதும் கொற்றம் அவர்க்குண்டு; பாலூட்டித் தாலாட்டிப் பாட்டிசைத்த தாய்க்குலத்தை, |