பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மாலூட்டுந் துன்பத்தை மாற்றுகின்ற பெண்ணினத்தைப்
பேணா தடிமையென்று பேசுகின்றீர்! சற்றேனும்
நாணா துரிமைபெற நாடுகிறீர் பித்துடையீர்!
பேயென்றும் நாயென்றும் பேதுரைகள் கொட்டுகிறீர்!
தாயென்றுந் தங்கையென்றுந் தக்கதுணை என்றெல்லாம்
உற்றமுறை சொல்வதற்கிங் குற்றவரார்? மாதரன்றோ?
குற்றமெலாஞ் செய்தாலும் பற்றுடனே காப்பவரார்?
அன்னை நகிற்பாலால் ஆற்றல் மிகப்பெற்றீர்,
மின்னை நிகர்மனையின் விஞ்சுசுவைத் தேன்மொழியால்
விண்ணையுஞ் சாடிவரும் வீரமுற்றீர், என்றாலும்
பெண்ணை யிகழ்கின்றீர்! பெண்ணுக்கு முன்னேற்றம்
தாராத நாட்டில் தருமுரிமை மெய்யாகச்
சேராது; பொய்யன்று செப்பும் வரலாறே;
‘இன்றுரிமை வேண்டி எழுந்துவிட்டார் பெண்ணினத்தார்
நன்றன்று பெண்ணுரிமை; நால்வேதம் ஒவ்வாது
அடிமைப் பிறப்பாகும் அப்பிறவி’ என்றால்
கடிதே அதைப்பொசுக்கக் காட்டுகிறான் தீப்பந்தம்;
மங்கையர்க்குச் சார்பாக மாவீரன் பாடுவதை
இங்கெடுத்துப் போற்றுவமேல் ஏற்றமுறும் நம்நாடு;
‘ஞனம் உரிமைஅறம் நல்லகுடிப் பெண்மகட்குப்
பேணுங் குணமாகும்; பீடுபெறும் இக்குணங்கள்
பெற்றுள்ள மாதரார் பெற்றெடுத்த நன்மக்கள்
கற்றறிவும்; தாய்நாடு காக்குங் கடனுணர்வும்
முற்றி யிருப்பர்; முளைத்துவரும் நெற்பயிர்கள்
உற்ற நிலத்தியல்பை ஒத்திருத்தல் உண்மையன்றோ?
எஞ்சாத ஞானத்தின் எக்களிப்பும், யாவர்க்கும்
அஞ்சாத நல்வழியும், ஆண்மையுறு நன்னடையும்,
நேர்கொண்ட பார்வையொடு நேரிழையார் பெற்றுவிடின்