பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்177

சீர்கொண்ட நம்நாடு செம்மை திறம்பாது;
நாற்றிசையும் ஓங்கியுயர் நாடெல்லாம் இந்நாட்டுக்
கோற்றொடியார் சென்றங்குக்கூடும் புதுமைகளைக்
கொண்டுவந் தின்பங் கொழிக்கச் செயவேண்டும்;
மண்டும் புகழ்நூல்கள் வாழ்வில் உறுநுட்பம்
கற்றுத் தெளிந்துணர்ந்து கட்டுக் கதைதகர்த்துச்
சுற்றுந் துயர்துடைக்கச் சொல்லும் புதுமைப்பெண்
நாட்டுக்கு வேண்டு, மென நல்ல சுவைகூட்டும்
பாட்டுக்கு வேந்தனெனும் பாரதி சொல்லிவைத்தான்;
‘பூவுலகோர் நம்நாட்டைப் போற்றிப் புகழவெனில்
பாவையர்கள் முன்னேற்றப் பாதைதனிற் சென்றிடுக’
என்னுங் கருத்தை எடுத்துரைத்தான்; அன்னவரும்
முன்னம் இருந்தகொடும் மூடப் பழக்கத்தைக்
கல்லிக் கடிந்தெறிந்து கல்வித் துறைமுதலாச்
சொல்லும் நெறியெல்லாந் தோன்றுகின்றார் முன்னேறி;
வாழ்விற் சரிபங்கு வாய்ப்பும் பெறுகின்றார்;
தாழ்வுறுதல் இல்லையவர் தாம்.

திருச்சி வானொலி நிலையம்
14.1.1965