பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

30
இதுவா முன்னேற்றம்?

முன்னேற்றம் பெற்றுவிட்டீர் மூடத் தனத்தைஎலாம்
பின்னேற்றிச் சுட்டெரித்தீர் பேருவகை கொள்கின்றோன்;
ஆனாலுந் தாய்க்குலத்தீர் அன்பால்நான் ஒன்றுரைப்பேன்
மேனாளில் செய்தவற்றை மீண்டும் நினைந்துளத்தில்
வாங்கும் பழியுணர்வால் வாட்டாதீர் ஆண்குலத்தை;
ஏங்கும் அடிமையென எண்ணி வருத்தாதீர்;
முன்னேற்றம் என்றுரைத்து மொய்குழலீர் செய்பவைதாம்
இந்நாட்டுப் பண்பாட்டை எள்ளி நகையாடும்;
கார்குழலைக், கொவ்வைக் கனியிதழை, வண்ணஎழில்
சேர்முகத்தைக், கைவிரலைச் செய்யும் அலங்கோலம்
கண்டுவிடின் ஐயஒ கண்ணீர் பெருகிவரும்;
பண்டை எழில்சிதைக்கும் பான்மையிதா முன்னேற்றம்?
கொண்டான் தவித்திருக்கக் கொஞ்சுமொழிப் பிள்ளைகளும்
திண்டாடிக் கூவத், தெரிவையர்கள் சங்கமென்று
வீட்டை மறந்துவிட்டு, வெள்ளைப் பொடிபூசி
ஈட்டும் பணச்செருக்கை எல்லார்க்கும் காட்டுதல்போல்
கையில் அசைந்தாடக் காசுப்பை தொங்கவிட்டு,
மெய்யின் எழில்காட்டி, வீதிஎலாஞ் சுற்றாதீர்;
பெண்மையைத்தான் தெய்வமென்று பேசுகின்றான் பாரதிஅம்
மென்மையைத்தான் ஏன்மறந்தீர்? மேவியநல் இல்லறத்தில்
ஏற்றுந் திருவிளக்கே ஏந்திழையார் என்றுரைப்பர்