தூற்றுந் தெருவிளக்காய்த் தோன்றுவதேன்? திங்கள்முகம் காய்ந்துலர்ந்து காண்பதுமேன்? கட்டழகு மேனியெலாம் தேய்ந்துலர்ந்து வாடியதேன்? சிந்திப்பீர்; நாகரிகப் பேரால் கடைச்சரக்கைப் பேணுவதோ முன்னேற்றம்? தீராப் பெருநோயாய்த் தீப்பழக்கம் சூழ்ந்ததுவே! மேலாடை யில்லாமல் மேனி மறைக்காமல் நூலாடை என்றுசொலி நுண்ணிடையில் சுற்றிவிட்டு மெய்யெல்லாங் காட்டுகிற செய்கையிதோ முன்னேற்றம்? தையல் இனத்துதித்தீர் தாய்க்குலத்தீர் ஆய்ந்துரைப்பீர்; நாட்டை உருவாக்கும் நல்லகுலம் நீங்களம்மா பாட்டால் குறைசொன்ன பான்மைக்குச் சீறாதீர்; கல்வியிலும் ஆட்சியிலும் காட்டுந் திறமையிலும் பல்வகையாம் நுண்கலையின் பாங்கினிலும் ஓர்நிகராய் முன்னேற்றங் கொண்டுயர்க; மொய்குழலீர் நாடுயரும் நன்னோக்கங் கொண்டுரைத்தேன் நான். திருச்சி வானொலி நிலையம் 14.1.1966 |