பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

31
பெண்ணின் பெருமை

ஆண்மைஎனப் பெண்மைஎனப் பேசு கின்ற
      ஆயிரண்டின் கூட்டுறவே உலகம் ஆகும்;
ஆண்மையின்றிப் பெண்மையிலை பெண்மை யின்றி
      ஆண்மையிலை; வீரமொன்று; காதல் ஒன்று;
மாண்பமைந்த இவ்விரண்டும் உயிர்ப்பண் பாகும்;
      மாநிலத்தின் வளர்ச்சிக்கும் இவையே வித்தாம்;
வீண்மையது மேல்கீழென் றிவற்றுட் காணல்;
      வியனுலகின் இருவிழியே ஆண்மை பெண்மை.

இருவிழியுள் உயர்ந்ததென ஒன்றைப் போற்றி
      இழிந்ததென மற்றொன்றைத் தாழ்த்தித் தூற்றி
வருபவரும் உளராயின் பித்தர் *என்கோ?
      வகைகெட்ட குறைபட்ட மதியர் என்கோ?
ஒருபொருளைக் காண்பதெனின் விழியி ரண்டும்
      உறுதுணையாக் கொளலொன்றே இயற்கையாகும்;
அருள்வழியில் இல்லறந்தான் இனிதி யங்க
      ஆண்மையுடன் பெண்மையிரு விழிக ளாகும்,

ஆணுயர்வா பெண்ணுயர்வா என்ற ஐயம்
      ஆறறிவுங் கூரறிவுங் கொண்டோர் தம்பால்
நாணும்வகை நானிலத்தில் தோன்றக் கண்டோம்;
      நலமில்லாப் புலமில்லா ஐயம் அன்றோ?


*என்கோ - என்பேனா