பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்181

சேணுயர்ந்த வானுலகத் தேவர் தாமும்
      சிவம்பெரிதா சக்திபெரி தாவென் றார்த்து
மாண்பழியச் செய்தனரேல் மண்ணில் வாழும்
      மாந்தரைநாம் குறைசொல்லிப் பயனே இல்லை.

பாருலகில் *இவ்வையம் தோன்றி விட்டால்
      பாழ்படுமே **இவ்வையம் என்ப தோரான்
சீருறவே தன்னலத்தை மிகுப்பான் வேண்டிச்
      சிந்தித்தான் ஒருவழியை; அற்றை ஞான்றே
பேரழகுப் பெண்ணினத்தை இழித்து ரைத்தான்
      பேயென்றான் நாயென்றான் மாயை என்றான்;
ஆருடைய மணிவயிற்றில் பிறந்தா னோஅவ்
      வன்னையைத்தான் இவ்வண்ணம் இகழ்ந்து ரைத்தான்,

அடக்கத்தின் மறுபெயரே பெண்மை; தூய
      அழகியலின் மறுபதிப்பே பெண்மை; அன்புத்
தொடக்கத்தின் பிறப்பிடமே பெண்மை; உண்மைத்
      தொண்டுக்கோர் இருப்பிடமே பெண்மை; மற்றோர்
இடர்க்கிரங்கும் அருமைத்தே பெண்மை; வந்த
      இன்னல்கொளும் பொறுமைத்தே பெண்மை; செல்வ
முடக்கத்தும் ஒப்புரவுப் பண்பே பெண்மை;
      மொழிந்தவற்றின் கூட்டணியே பெண்மை யாகும்.

வணங்குகிற நிலைகொடுக்கும் அன்னை யாகி
      வளர்காதற் கலைபடைக்கும் மனைவி யாகி,
உணங்கலிலா அன்புக்கோர் உடல்போல் நிற்கும்
      உடன்வயிற்றுப் பிறப்பாகி, நெஞ்சில் ஊறும்
நுணங்சுரிய பரிவுக்கே இலக்காய்த் தோன்றும்
      நுண்ணிடைய மகளாகி, உலகில் நல்ல
குணங்களெலாம் வளர்வித்து மகிழ வைத்துக்
      குளிர்வித்து வாழ்வதன்பேர் பெண்மை யாகும்.


*-இ + ஐயம், ** இ + வையம்