பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

அறுசுவையாம் உணவனைத்தும் ஆக்கி வைப்பர்
      அலுவலுக்குச் சென்றயர்ந்த கொழுநன் மீண்டு
வருநெறியில் விழிவைத்துக் காத்து நிற்பர்;
      வளர்கல்விப் பள்ளிக்குச் சென்ற பிள்ளை
குறுகுறுவென் றோடிவரும் திசையை நோக்கிக்
      கூடத்தில் அமர்ந்திருப்பர்; இல்ல றத்தின்
உறுபயனை வருவிருந்தைப் பார்த்தி ருப்பர்
      ஒருபோதும் தந்நலமே கருதாப் பெண்டிர்

கண்ணுக்குப் புலனாகும் அமைதி யைத்தான்
      கற்றவர்கள் பெண்மைஎனக் கழறி நின்றார்;
மண்ணுக்குப் பொறையுடைமை உரிமை என்றால்
      மங்கையர்க்குப் பிறகன்றோ அதற்குச் சேரும்;
எண்ணுக்குள் அடங்காத இன்ன லுற்றும்
      எள்ளளவும் தளராமல் உலகைக் காக்கும்
பெண்ணுக்கு நிகராக ஒன்றுண் டோ? அப்
      பிறப்பெடுக்க மாதவந்தான் வேண்டு மம்மா!

முன்பிருந்த தமிழ்மாந்தர் பெண்ணி னத்தின்
      முதன்மைக்கு மதிப்பளித்துப் போற்றி வந்தார்;
அன்பிருந்த காரணத்தால் ஆண்மை பெண்மை
      அவ்விரண்டும் சமமென்று நினைந்து வாழ்ந்தார்;
நன்குணர்ந்த அவ்வைமுதல் மகளிர் தம்மை
      நாட்டிலுயர் அரசரெலாம் மதித்து வாழ்ந்தார்;
பின்பிறந்தார் எப்படியோ பேத லித்தார்
      பெண்ணினத்தை வேதனைக்குள் வீழ்த்தி விட்டார்.