கற்புக்கும் பண்புக்கும் இல்ல றத்தின் காப்புக்கும் கண்ணகித்தாய் சான்றாய் நின்றாள்; பொற்புக்கும் நற்கலைக்கும் தன்ன லத்தைப் போக்குதற்கும் மாதவித்தாய் சான்றாய் நின்றாள்; *அற்புக்கும் அருளுக்கும் ஆசை எல்லாம் அடியோடு துறந்ததற்கும் சான்றாய் இங்கு நிற்றற்கு மேகலைபோல் யாரே உள்ளார்? நேரிழையார் பெருமைசொல இவரே போதும், அன்னையொடு தந்தையையும் தெய்வ மென்றார்; ஆண்டவனை விளித்தவரோ அம்மே அப்பா என்னவொரு பாவுரைத்தார்; சத்தி யாகிச் சிவமாகி என்றவொரு பாட்டும் உண்டு; முன்னையவர் மொழிந்தவற்றை உற்று நோக்கின் முதலிடத்தைப் பெண்மைக்கே அளித்தி ருந்தும் பின்னையவர் ஏன்மறுத்தார்? பெண்மைக் கேனோ பிழைபுரிந்தார்? பிறபண்பின் நுழைவோ? யாதோ? கல்விதனைக் கலைமகளென் றுரைத்து வைத்தார்; கடலுலகை நிலமகளென் றழைத்து வந்தார்; பல்வகைய செல்வத்தை மலரில் ஏற்றிப் பணிந்த**திரு மகளெண்மர் என்றார்; நாளும் சொல்விளையும் தமிழ்மொழியைத் தாயே என்றார்; துணைசெய்யும் நன்மைஎலாம் நல்லார் என்றார்; ***எல்வளையர்க் கிவ்வண்ணம் மேன்மை தந்தும் எப்படியோ பின்னாளிற் கீழ்மை தந்தார்,
*அற்பு - அன்பு **திருமகள் எண்மர் - அட்ட இலக்குமி ***எல்வளையர் -ஒலி பொருந்திய வளையலணிந்த பெண்டிர், |