184 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
உயிரினத்திற் கமைந்ததோர் இயற்கைப் பண்பே உரிமைஎனச் செம்பொருளோர் உரைப்பர்; ஆனால் பயிரினத்தில் விலங்கினத்தில் பறந்து வாழும் பறவைமுதல் அஃறிணையில் உரிமை யாவும் உயிரெனவே நிலைபெறுங்கால், பகுத்து ணர்ந்த உயர்திணையில் பெண்ணுரிமை மறுத்தல் ஏனோ? *செயிர்அவர்மேல் தோன்றுவதேன்? சமமா எண்ணிச் சேர்ந்துறைந்து வாழ்ந்தாலென்? குறைந்தா போகும்? **தமிழ்முனிவர் தாய்க்குலத்தின் பெருமை எல்லாம் தந்துரைத்த வண்ணமொரு சிலவே சொன்னேன்; அமுதமொழிப் பாவையர்க்கு நான றிந்த அன்புரைகள் ஒன்றிரண்டு புகலல் வேண்டும்; உமியளவுங் குறைசொல்லும் எண்ண மில்லை ஒவ்வாத செயல்முறைகள் காணும் போது குமுறுமென துளக்கருத்தைச் சொல்வ தொன்றே கொண்டகடன்; எனக்கதுவே இயல்பும் ஆகும், கற்றறிந்த மகளிர்சிலர் திரும ணத்தைக் கடிந்தொதுக்கக் காண்கின்றேன்; ‘கணவ னுக்கோர் உற்றடிமை ஆவதுவோ? பிள்ளைப் பேறாம் உறுதுயரால் சாவதுவோ? அடிமை அல்லோம்; பெற்றவர்சொற் படிநடவோம்’ என்றே ஆர்ப்பர்; பெண்ணினமே திருமணத்தை வெறுத்து விட்டால் அற்றுவிடும் மாந்தரினம்; பிறப்பே இல்லை; அன்னைநிலைக் கஞ்சுவதோ? இயல்போ ஈது?
*செயிர் - கோபம், **தமிழ் முனிவர் - திரு.வி.க. |