பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்185

மண்ணுரிமை வேட்டவர்தாம் வீரங் கொண்டு
      மறப்போரைத் தொடங்கிடுவர் முறையும் ஆகும்;
பெண்ணுரிமை வேட்டெழுந்தோர் ஆண்மை யோடு
      பெரும்போரைத் தொடங்குவது முறைமை யாமோ?
கண்ணுரிமை வேட்டெழுந்தே இமைக ளோடு
      கடும்போரைத் தொடங்கிடுமேல் விளைவென் னாகும்
பெண்ணுரிமை யாதென்னில் அடிமை யின்றிப்
      பேரன்பாற் சரிநிகராய் வாழ்தல் ஆகும்

மென்மையைத்தான் பெண்மையென உலகம் பேசும்
      மெல்லியலார் இவ்வுண்மை உணர்தல் வேண்டும்;
வன்மையைத்தான் ஆண்மையென நவில்வர் மேலோர்;
      வாய்ப்பிதனால் கடமைகளும் வேறு வேறாம்;
நன்மையைத்தான் நாடுகின்ற நங்கை யர்க்கும்
      நடைமிகுந்த காளையர்க்கும் உரிமை ஒன்றாம்;
புன்மையைத்தான் விட்டொழித்துச் சமமாய் நின்று
      புத்துலகப் பயணத்தைத் தொடங்கல் நன்றாம்.

சுவையுணவைச் சமைப்பதற்கு மறுத்து விட்டால்
      சொல்கின்ற பெண்ணுரிமை வந்தா சேரும்?
சுவையுணரா வாழ்வுமொரு வாழ்வா? நூல்கள்
      தொடுகின்ற கைகளினாற் பானை தொட்டால்
நவைஎதுவும் நிதழ்வதில்லை; தாலாட் டுப்பா
      நன்கறிந்த தாய்மார்தாம் எவரே உள்ளார்?
இவையறிந்தால் பிற்போக்காம்! நன்மை யாவும்
      எடுத்தெறிந்தா முற்போக்குக் காணல் வேண்டும்?

முன்னேற்றம் என்றுசொலி முழங்கும் மாதர்
      முகத்துக்குப் பொலிவுதரும் மஞ்சள் உண்டா?
மின்னேற்றம் பொலிமுகத்தில் பொடிமாப் பூசி
      மீசைக்குப் போட்டியிடல் நன்றோ? சொல்வீர்!