32 அணையா விளக்கு நேரிசை ஆசிரியப்பா கொடையே வாழ்வின் குறிக்கோ ளாக உடையோன் அழகன் ஒருதனிச் செம்மல் திரைகட லோடித் தேடிய செல்வம் குறைவற வார்க்கும் நறுநெய் யாகக் கலைத்திறன் முற்றக் கைவலா ரியற்றிய நிலைத்தநற் கூடம் நெடியதோர் *தகழியா ஏற்றிய விளக்கின் இலங்கொளி பெற்றுத் தோற்றிய அறிவால் துலங்கிடும் மணிகாள், விளக்கெனும் ஒருசொல் விளக்கிடும் பொருளை உளத்தினிற் புலப்படத் தெரிந்திடல் நன்றாம்; இருளெனும் ஒருபகை எங்கும் பரந்து பொருள்தெரி யாவணம் புதைத்ததை மறைத்திடும்! தெரியாப் பொருளைத் தெள்ளிதின் நமக்குத் தெரியச் செய்வது செவ்விய ஒளியே; விளங்காப் பொருளை விளக்கிய ஒளியை விளக்கென முன்னோர் விளம்பினர்; அதுதான் உள்ளும் புறமும் ஒளிசெய் வகையால் கொள்ளும் இருவகைக் கூறெனக் கூறுவர்; கடல்வளை உலகிற் காரிருள் சூழ்ந்து,
*தகழி - அகல் விளக்கு |