பக்கம் எண் :

20கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

சொல்லாருந் தமிழ்மொழியாம் கணக்காம் ஏதோ
      துணைமொழியாம் அறிவியலாம் இப்படித்தான்
பொல்லாத பாடமெலாம் பாய்ச்சு கின்றார்
      பொறுமையுடன் கேட்பதற்குச் சிலையா நாங்கள்?”

“வேளைதொறும் கல்விதரும் ஆசான் எங்கள்
      விளையாட்டுச் சிறுபொம்மை; வகுப்போ நாங்கள்
ஆளயரும் பொழுதத்துச் சடையைக் கட்டி
      ஆடைகளில் முடிச்சிட்டுக் களிக்கும் மேடை;
காளையரும் மங்கையரும் அகத்து றைக்குள்
      களவியலை ஒத்திகைபார்த் திருக்குங் கூடம்
தோளுயரும் பொழுதத்தில் ஆசா னோடு
தொடுக்கின்ற போர்நடத்தும் களமும் ஆகும்.”

மாணவர்கள் இவ்வண்ணம் உரைப்ப ரானால்
      மதிநலந்தான் உருப்படுமா? நாட்டின் மேன்மை
காணவரும் நாள்வருமா? இந்த மண்ணில்
      கல்விவளந் தான்பெறுமா? படிப்ப தற்குப்
பூணழகுப் பொருள்விற்றுக் காடு விற்றுப்
      பொருளனுப்பி எதிர்கால ஒளியை நம்பிக்
காணஎதிர் பார்த்திருக்கும் பெற்றோர் நெஞ்சம்
      களிப்புறுமா? விடிவெள்ளி அங்கா தோன்றும்?