பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே21

6
நூலகமும் மாணவரும்

புகுதற்குத் தகுதியிலா இடமே என்று
      புந்திதரும் நூலகத்தை ஒதுக்கி விட்டீர்;
நகுதற்கும் ஆடலுக்கும் மனத்தைத் தந்தோர்
      நாடிவரின் பலனில்லை; அறிவு வேலைத்
தகதகக்கக் கூர்ப்படுத்துஞ் சாணைக் கற்கள்
      சாருமிடம்; அறியாமைப் பகையை மாய்க்கும்
தகுதிபெற, நுழைபுலமும் கூர்மை யாகத்
      தகுதியுடன் பதமாகச் செய்யுஞ் சாலை.

ஒருமையுடன் நூலகத்துள் நுழைதல் வேண்டும்;
உயர்ந்தகலை நூல்பலவும் படித்தல் வேண்டும்;
பெருமைதரும் நூலதனைப் படிக்கும் போது
      பேச்சின்றிப் புறவழியில் நாட்ட மின்றிப்
பொறுமையொடு கண்ணூன்றிக், கருத்தும் ஊன்றிப்
      புத்தகத்து நல்லமுதைப் பருகல் வேண்டும்;
பெறுபொழுதை இவ்வண்ணம் பயன்ப டுத்திற்
      பெருமைஎலாம் வழிவினவி வந்து சேரும்.

பெறற்கரிய பருவமிது; பெற்ற ஒன்றைப்
      பெருநெறியில் நல்வழியில் பயன்படுத்தின்
உறற்கரிய உயர்வெல்லாம் உம்மைச் சேரும்
      உமதறிவால் நாட்டுக்கு நன்மை சாரும்;