பக்கம் எண் :

200கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மேவாத மனமுடையார் ஒன்று கூடி
      மேலான எழுத்தாளர் என்று கூறிக்
காவாத நாவினராய் வீட்டுக் குள்ளே
      கழறுகிற மொழியெல்லாம் எழுதி வைத்துச்
சாவாத இலக்கியமென் றியம்பிவந்த
      சழக்கருக்கே முதலிடமென் றிருந்த நாளில்
மூவாத தமிழ்வளர வழிவ குத்த
      மு.வ.வின் தமிழ்த்தொண்டே தலைநின் றோங்கும்.

அறிவியலைத் தமிழ்மொழியில் ஆக்க வேண்டி
      அதற்கென்றே உழைத்துவரும் கோவை தந்த
பொறியியலில் வல்லார்கள் வெளிக்கொ ணர்ந்த
      பொன்மலராம் கலைக்கதிரின் புதுமை காட்டும்
நெறிமுறையை நாமின்னும் உணர வில்லை;
      நிலையான அவர்பணியை மதித்துப் போற்றின்
வருமுலகம் நமைவாழ்த்தும் புகழும் சேர்க்கும்
      வளர்தமிழில் புதுமைகளும் மலர்ந்து நிற்கும்.