பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்203

சமயமெனக் கடவுளெனப் பேர்கள் சொல்லித்
      தழைத்துவரும் போலிகளைக் கடியும் கூர்வாள்;
தமிழரிடைப் படர்ந்துவரும் சாதித் தீமைச்
      சழக்குகளை வேரொடுசுட் டெரிக்குஞ் செந்தீ;
இமயமலை தந்தபொது மொழியீ தென்றே
      இந்திவரின் தடுத்தொழிக்கும் கேட யங்காண்;
நமதினத்தை விழிப்புறுத்தும் வெற்றிச் சங்கம்
      நாளெல்லாம் அவனெழுதித் தந்த நூல்கள்.

‘நக்கீரர் சிவஞான முனிவர் என்போர்
      நாம்மகிழ ஓருருக்கொண் டிங்குத் தோன்றி
இக்காலை நற்றமிழை வளர்க்க வந்தார்,
      இந்நாடு தனைமறந்து துயிலுங் காலை
எக்காளம் எடுத்தூதி விழிக்கச் செய்தார்
      இவரென்று மண்முழங்கும் மரம்மு ழங்கும்
முக்காலும் ஈதுண்மை’ என்று சான்றோர்*
      முழங்கினரேல் அவனெழுத்தின் பெருமை என்னே!

கல்லாதார் தமிழ்மொழியைக் கரைகண் டாற்போல்
      கருதினராய் அயன்மொழிச்சொல் பலவுங் கூட்டி
இல்லாத வழுமொழியும் சிதைந்த சொல்லும்
      எண்ணிறந்து குழப்பியதை எழுதிக் காட்டிப்
பொல்லாத செயல்புரிந்து தமிழின் தன்மை
      புரியாத படிசெய்த இருட்டர் கூட்டம்
நில்லாது வெருண்டோட எழுந்து வந்த
      நீள்கதிராம் மறைமலையைத் தொழுவோம் வாரீர்.


* சான்றோர் - திரு.வி.க

10.06.1969