பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

5
வாழிய தமிழ் முனிவர்

தாயைத் தந்தையைத் தம்முடன் பிறந்தார்
தோயும் அன்பைத் துறந்தனர் எனினும்
முப்பா லூட்டிய முத்தமிழ் அன்பினில்
தப்பா தொழுகுந் தவமுனி யவர்தாம்;
வீட்டுப் பற்றும் வேறுள பற்றும்
*வீட்டுந் துறவறம் விழைந்தவர் எனினும்
நாட்டுப் பற்றினை நயந்திடுங் குறிக்கோள்
வேட்டுப் பணிசெயும் வியத்தகு தொண்டர்;
மனத்துப் பற்றினை விடுத்தனர் ஆகினும்
இனத்துப் பற்றோ டியங்கும் நடத்தையர்;
தம்மைத் தூற்றினும் தாம்பகை கொள்ளார்
எம்மவர் என்றே இனநலம் பேணுவர்;
கருத்து வேற்றுமை கருதில ராகிப்
பொறுத்துச் செல்லும் புன்னகை முகத்தினர்;
பன்னெறி யாளரும் பழகுதற் கேற்ற
நன்னெறி யாளர் நாநலம் மிக்கார்;
எளியோர்க் காணின் இரங்கும் நெஞ்சினர்
அளியால் பற்பல அறங்கள் புரிபவர்:
அருச்சனை ஒன்றே ஆண்டவன் அருளைப்
பெறத்தகு வழியெனல் பேணா ராகி,
உருக்குலைந் தொடுங்கிய உழைப்பினர் வாழத்


* வீட்டும் - அழிக்கும்