பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்205

தெருத்தெரு வாகத் திரிவோர் உய்ய
வாழ்வின் துய்ப்பிலா வறியவர் நலம்பெறச்
சூழ்வதே ஆண்டவன் தொண்டெனத் தொடர்வார்;
திருமடம் ஒன்றே உறைவிடம் என்று
கருவறைப் புகுந்து காலங் கழியார்
ஊர்தொறும் ஊர்தொறும் ஓயா தோடிச்
சீர்பெறும் சிந்தனை செப்பிடும் பணியினர்;
சமயம் சார்தரு குறைகளைச் சாடிடச்
சமயம் வருங்காற் சற்றுந் தயங்கார்;
நற்றமிழ் பாடிய சொற்றமிழ்ச் சுந்தரன்
சொற்றிடும் பாடலிற் சொக்கிய சொக்கன்
தோழமை தந்தும் துணைபல புரிந்தும்
வாழும் வகைஎலாம் வழங்கினன் என்பர்;
அடிகளும் என்பால் அரும்பிய பாடலின்
அடிகளில் மயங்கினர் அன்புறு தோழமை
தந்தென துளத்தைக் கொண்டனர் தமிழ்முனி;
குன்றைச் சூழ்ந்துள குன்றக் குடியில்
ஒன்றிய திருமடம் உறைதரும் அடிகள்
நன்றிவண் வாழ்கென நலமிகு நெஞ்சே
சென்றுரை அவர்பால் சேவடி பணிந்தே.

14.9.75