210 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
9 புதுக்கோட்டைக் காந்தி கற்றுணர்ந்த மேலவனே, கற்ற வற்றைக் கடைப்பிடித்து வாழ்பவனே, கவிஞர் தம்மை முற்றுணர்ந்த புலவர்தமைச் சாவா வண்ணம் முன்னின்று காத்தவனே, எங்கள் தந்தாய், உற்றவரும் மற்றவரும் அண்ணா என்றே உரிமையுடன் அழைக்கின்ற அண்ணால், எங்கள் சுற்றமெலாம் வாழ்விக்க வந்த கோவே சுப்ரமண்யப் பெயரோய் நீ வாழ்க நன்றே. பிறப்பெடுத்த மாந்தரிலே பலரும் தம்மைப் பேணுதற்கே வாழ்கின்றார்; சிலர்தாம் என்றும் மறப்பதற்கு முடியாத வண்ணம் வாழ்வை மற்றவர்க்கும் பயன்படுத்தி வாழ்ந்து நிற்பார் சிறப்புடுத்த இவ்வாழ்வை நின்பாற் கண்டோம்; சீரியனே பயன்கருதாத் தொண்டுக் கென்றே சுரப்பெடுக்கும் அருளுளத்தால் வாழ்ந்து நிற்கும் தோன்றல்நினக் கெவ்வாறு நன்றி சொல்வோம்? மழைபொழிந்து பார்புரக்கும் முகில்த னக்கு மாநிலத்தார் எவ்வாறு நன்றி சொல்வர்? விழைவெழுந்து பாலூட்டும் தாய்க்கு நன்றி விளம்பிடஓர் சொல்லுண்டோ? எளியேம் எம்மை விழிதிறந்து வாழ்வுக்கு வழிதி றந்து வீறுபெற உய்வித்தோய் நினக்கு நன்றி மொழிவதற்கும் மொழிகாணேம்; எங்கள் நெஞ்சால் முப்பொழுதும் தொழுவதன்றி வழியுங் காணேம். |