பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்217

நிலையாத உலகத்தில் நிலைத்தசெயல்
      செய்தமையால் நெஞ்சந் தோறும்
சிலையாக நிற்கின்றான் சித்திரமாத்
      தோன்றுகின்றான் செழுமை கொண்ட
மலையாக வாழ்கின்றான் கலையாக
      வளர்கின்றான் மனத்துள் எண்ண
அலையாக அசைகின்றான் அரியணையா
      நம்முளத்தை ஆக்கிக் கொண்டான்.

அரங்கிருக்கும் கடமிருக்கும் அருகிலிசைக்
      கருவியெலாம் அமைந்தி ருக்கும்
சுரமிருக்கும் தோற்கருவி துணையிருக்கும்
      குழுவொன்று சூழ்ந்தி ருக்கும்
நரம்பிழுக்க மூச்சடக்கி நடுவிருந்து
      பாடுபவர் நாவ சைத்தால்
கரகரத்த குரலிருக்கும் தமிழ்மட்டும்
      அங்கிருக்கக் கண்ட தில்லை.

தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழரிடை
      இசையரங்கில் தமிழை நீக்கித்
திமிர்காட்டும் மனமுடையர் தேர்ந்தெடுத்துப்
      பிறமொழியைத் திணிக்குங் காலை
சுமைதாங்கிக் கல்லாகச் சூடில்லாச்
      சிலையாகச் சோர்ந்து நின்றோம்
அமிழ்தூட்டும் தமிழெங்கே? என அதட்ட
      அறியாத ஆமை யானோம்.

அன்றுநமக் குணர்வூட்டி, ஆர்ப்பரிக்க
      வழிகாட்டி, அறிவா னாய்ந்து
நின்றுநமை நெறிப்படுத்தி, நிலைத்திருந்த
      வசைநீக்கி, நிமிர்ந்து நிற்கக்
குன்றெனவே நின்றானைக் குய்யமதை
      வென்றானைக் கூடிப் பாடி
இன்றுமிவண் வாழ்வானை என்றுமுள
      தென்றமிழால் ஏத்தி நிற்போம்.

(அண்ணாமலைப் பல்கலைக் கழக வைரவிழா மலருக்காக)


குய்யம் - வஞ்சனை