பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்219

13
மாணிக்கப் புலவன்

யாதும் அவாவிலன் யாமையென் றடங்கினோன்
போதும் எனுமனம் பூத்த நெஞ்சினன்
பயனில சொல்லாப் பாவலன் என்றும்
நயனுள பொழியும் நாவலன் என்பால்
ஈடிலா அன்பன் எளியன் இனியன்
கேடிலா மனத்தன் கிளர்ச்சித் தலைவன்
எங்கள் கழகப் புலவன் இவனெனப்
பொங்கும் உணர்வாற் பொலிந்த பெற்றியன்
பெருக்கிய புகழ்நிலை பேணிவந் துறினும்
செருக்கே அறியாச் சீர்மை யாளன்
அருமை அருமைஎன் றான்றோர் போற்றும்
பெருமிதங் குன்றாப் பேரறி வாளன்
தொல்காப் பியத்தைத் துருவித் துருவிப்
பல்கால் ஓதிப் பாங்குற மொழிந்தவன்
உள்ளந் தெளிவுற உலகம் மகிழ்வுற
வள்ளுவந் தந்த மாமணி நாளும்
சிந்தனைப் புதுமையைச் செவ்விதிற் காட்டும்
செந்தமிழ் நடையிற் சீரியன் கூரியன்
ஆள்வோ ராகினும் அவர்க்கும் அறிவுரை
கேள்போல் நின்று கிளத்தும் துணிவன்
ஆசாற் றொழுதெழும் அரும்பெறல் மாணவன்