பக்கம் எண் :

222கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மன்றினில் மகிழ்தல் ஒன்றே
      வாழ்க்கையின் பயனாக் கொண்டான்
வென்றிகள் பலவும் பெற்றான்
      விழையுமென் நட்பும் பெற்றான்.

மழலையர் தெரிந்து கொண்டு
      மனத்தினிற் பதித்துப் பாடிப்
பழகிடப் பாடல் தந்தான்;
      பச்சிளங் குழந்தை நெஞ்சில்
அழகிய பாட்டு ணர்ச்சி
      அரும்பிட வேண்டும் என்ற
விழைவுடன் ஈடு பட்டான்
      வியத்தகு குறிக்கோள் கொண்டான்.

குழந்தைகள் பாடல் பாடக்
      குழந்தையின் உள்ளம் வேண்டும்
பழந்தமிழ் உணர்வு வேண்டும்;
      பண்புறும் நெஞ்சும் வேண்டும்;
வழங்கிடும் பண்பு வேண்டும்
      வாய்மையோ டெளிமை வேண்டும்
மொழிந்திடும் அனைத்துங் கொண்டான்
      முனைப்பிலா வள்ளி யப்பன்.

21.3.1981