பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்225

17
நட்பிற் பெரியன்

தைக்கின்ற ஊசிதனில் கூர்மை யுண்டு
      தமிழண்ணல் நுழைபுலத்தும் அதனைக் கண்டேன்;
மொய்க்கின்ற அலைகடலில் ஆழம் உண்டு
      முன்னவன்றன் கல்வியிலும் அதனைக் கண்டேன்;
மெய்க்கின்ற முகில்வானில் அகலம் உண்டு
      மேலவன்றன் புலமையிலும் அதனைக் கண்டேன்;
மைக்குன்ற வரைத்தேனில் இனிமை யுண்டு
      மனத்துவளர் நட்பினிலும் அதனைக் கண்டேன்.

உடனுறையுங் காலத்தே எனது நெஞ்சில்
      ஊறிவரும் பாடலுக்குச் செவிலி யானான்;
இடனறவே மனக்கவலை கவ்வும் வேளை
      இனிய சொலித்தேற்றுகின்ற துணைவன் ஆனான்;
கடனறியும் உளப்பாங்கால் உண்மை யன்பு
      காட்டுகிற மனப்போக்கால் இளவல் ஆனான்;
அடவிரைவில் பேராசான் ஆகி என்னை
      அப்படியே விட்டுவிட்டு மதுரை போனான்.

அவன்நெஞ்சை நானறிவேன் எனது நெஞ்சை
      அவனறிவான்; ஒருவருக்குள் ஒருவ ராகி
இவரிரட்டைப் புலவரென உரைக்கும் வண்ணம்
      எஞ்ஞான்றும் எவ்விடத்தும் உலவி வந்தோம்;
அவன்தொழிலால் மதுரைக்குப் பிரிந்து சென்றான்
      ஆயினும்எம் உள்ளங்கள் பிரியவில்லை
அவனுறவை இரட்டித்த முப்பத் தாண்டின்
      அகவையிலும் நினைந்துநினைந் திளைஞன் ஆனேன்.