226 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
முதற்படியில் நின்றிருந்தான் அன்றி ருந்தே முகம்மலர அகம்மலரப் பழகி வந்தான்; முதற்படியில் நின்றபடி முயற்சி தன்னால் முன்னேற்றப் படியேறி உயர்ந்து வந்தான்; இதற்கிடையில் பலபடிகள் கடந்தும், முன்னர் இருந்தபடி யிருக்கின்றான் நட்பில் இன்றும்; *மதர்ப்படியில் உருப்படியும் செருக்கு மட்டும் மனத்தடியில் சாகுபடி யாக வில்லை. மனத்துக்குள் செருக்கில்லான் எனினும் சான்றோர் மதிக்கின்ற பெருமிதத்திற் குன்றமாட்டான்; முனைப்புற்ற எவரிடத்தும் பணிய மாட்டான் முன்னேற்றம் தடைப்படினும் வளைய மாட்டான்; எனக்குற்ற இளவலென விளங்கி நிற்பான்; எனினுமவன் அடிப்பொடியன் நட்பில் மட்டும்; புனத்துக்குள் உலவிவரும் கவரி மான்போல் பூமனத்தன் வாழ்கின்றான் வாழ்க நன்றே. உருவத்தாற் சிறியவன்றான் எனினும் நல்ல உள்ளத்தால் உயர்மதியால் பெரியன் ஆவன்; பருவத்தால் முதிர்ந்துவரும் புலமை கொண்டான் பாதியிலே உதிர்ந்துவிழும் வெம்பல் இல்லை; உருவத்தில் மெலியவன்றான் எனினும் கல்வி ஊற்றத்தால் புலமையினால் வலிமை மிக்கான்; எருவைத்தாற் பயிர்வளரும்; புலமை வைத்தான் இவனிடத்தே தமிழ்வளரும் செழித்து நன்றே;
* மதர்ப்படியில் உருப்படியும் - மதர்ப்பின் அடியில் உருவாகும். 30.1.1980 |