பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே23

7
ஒப்பனையும் மாணவரும்

பாடலெது? உரைநடைதான் எதுவென் றிங்குப்
      பகுத்துணர இனமுணர இயலா வண்ணம்
மேடையிலே முழங்குவதைக் கேட்டுக் கேட்டு
      மெல்லியஎன் உள்ளமெலாம் நைந்து நைந்து
வாடுகிறேன்; அதுபோலக் கல்வி கற்க
      வருபவர்தம் ஒப்பனையால் அவர்த மக்குள்
ஆடவர் யார்? மகளிர் யார்? தோற்றத் தாலே
      அடையாளந் தெரியாமல் மயங்கு கின்றேன்.

பிடர்வரையில் தொங்குகிற முடிகள் வாரிப்
      பேணாமல் சிதறுண்டு முகம்ம றைக்கும்;
தொடர்ந்துவரும் தமிழ்வீரந் தாழ்ந்து விட்ட
      துயரத்தைத் தொங்குகிற மீசை காட்டும்;
அடர்செடிகள் விலங்கினங்கள் பொறித்த சட்டை
      *அடவியில்வாழ் மாந்தரையே நினைவிற் கூட்டும்.
இடையணிந்த தொளதொளத்த காலின் சட்டை
      இருக்கின்ற தூசியெல்லாம் தெருவிற் கூட்டும்.

முகமதிய ரானவர்தாம் கைலி என்று
      மூட்டிவைத்த ஆடைதனை உடுத்திக் கொள்வர்;
*முகமதிய ரானவரும் பயிலும் போது
      முற்போக்கென் றதனைத்தான் உடுத்து கின்றார்;


* அடவி - காடு
* முகம் மதியர் ஆனவரும் - மதிபோன்ற முகமுடைய மகளிரும்