பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்231

20
கலைத்திறன் காட்டும் கணபதி

கலைத்தொழில் தேர்ந்த நண்பன்
      கணபதி என்னும் பேரான்
மலைத்திடும் வண்ணம் கண்டான்
      வள்ளுவர் கோட்டம் ஒன்று
நிலைத்திடும் பேரும் பெற்றான்
      நெஞ்சினில் வஞ்சம் இல்லான்
கலைத்திறன் வாழ்க என்பேன்
      கனிதமிழ் நிறைந்த நெஞ்சால்

வைத்திய நாதச் சிற்பி
      மாதவன் செய்தான் என்று
மொய்த்துல குரைக்கும் வண்ணம்
      மொய்ம்புற முனைந்த மைந்தன்
வைத்துள உளியால் இந்த
      வையமே வியந்து போற்றக்
கைத்திறன் காட்டி நின்றான்
      கல்லையும் கனிய வைத்தே.

கயல்விழிக் கண்ண கிக்குக்
      களங்கமில் அன்னம் வைத்து
மயல்விழி மாத விக்கு
      மாமயில் ஒன்று வைத்து
வியனுல கேத்தும் வண்ணம்
      வியப்புறும் சிற்பம் செய்தான்
பயன்கொள நினையா நெஞ்சன்
      படைத்தனன் புகாரில் அன்றே.

(சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் சிற்பக்கலைக்கூடம் ஆகியன யாத்த பெருஞ்சிற்பி கணபதியைப் பாடியது. சிற்பி கணபதி அவர்கள் கவிஞருடன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவரும், நண்பரும் ஆவார்.)