240 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
இதழ்விரித்த தாமரையில் இனியநறுந் தேனூறும்; இவன்றன் வாயின் இதழ்விரித்து நாவசைத்தால் இனியதமிழ் தானூறும்; மக்கள் கூட்டம் அதன்சுவையை நனிமாந்த அஞ்சிறைய தும்பிகளாய் அணுகி வந்து மதுவருந்தி மனமகிழ்ந்து வாழ்த்திசையைப் பாடிடுவர் தமது வாயால். பல்கலையின் கழகத்தில் பயில்கின்ற நாள்முதலே சொற்போர் செய்து வெல்கலையில் வல்லனவன் பேசுங்கால் வெட்டொன்று துண்டி ரண்டாச் சொல்கலையில் சூரனவன் சொன்னதையே சொல்லாமல் மேலும் மேலும் பல்வகையிற் சிந்தித்துப் படைத்திடுவான் நல்லமுது பருகும் வண்ணம். வேர்த்தெழுந்தோர் அரங்கேறி வினாவிடுத்தால் வினவியவர் வெட்கும் வண்ணம் ஆர்த்தெழுந்து விடையிறுப்பான் அவன்தொடுக்கும் மறுப்புரையில் அடுக்கும் சொற்கள் கூர்த்தெழுந்த அம்பாகும் கூடாரைப் புறங்காணச் செய்வ தற்குச் சீர்த்தெழுந்த வேலாகும் சிந்தனைக்கு விருந்தாகும் தேனும் ஆகும். |