பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்247

கோடையிலே சிரித்தமலர் மணத்தை வாரிக்
      கொண்டுசெலும் பொதிகைமலைத் தென்றல்; நீயோ
மேடையிலே சிரித்தவர்தம் பணத்தை வாரி
      மெதுவாகக் கொண்டுசெலும் ஆருர்த் தென்றல்.

செங்கதிரோன் சிரித்துவிடின் புழுக்கந் தோன்றும்
      சிறியபனை விசிறிகளின் துணையை நாடும்;
செங்கதிரின் வெயில்காயத் தானே வந்து
      சிறியபுழு வீழ்ந்துடலம் சுருண்டு சாகும்;
பொங்கிவரும் நின்சிரிப்பால் பகைவர் நெஞ்சம்
      புழுக்கமுறும் விசிறிகளின் துணையை நாடும்;
எங்களுளங் கவர்ந்தவனே பகைப்பு ழுக்கள்
      இடந்தெரிய மாட்டாமல் வீழ்ந்து சாகும்.

திகழ்ந்துவரும் வெண்ணிலவு சிரித்தால் ஒன்று
      சேர்ந்திருக்கும் காதலர்க்குக் களிப்பை யூட்டும்;
மகிழ்ந்திருந்து பிரிந்தவர்க்கோ எரிச்சல் ஊட்டும்;
      மதியினையே திட்டுகிற மருட்சி யூட்டும்;
முகிழ்த்துவரும் நின்சிரிப்போ நின்னைச் சேர்ந்த
      முன்னேற்றக் கருத்தினர்க்கு மகிழ்ச்சி யூட்டும்;
இகழ்ந்துன்னைப் பிரிந்தவர்க்கோ எரிச்ச லூட்டும்;
      ஏதேதோ திட்டுகிற மருட்சி யூட்டும்.

உயர்வுக்கு வானத்தை உவமை சொல்வர்;
      உழைத்துவரும் உயர்வுக்கு வானம் நீதான்
மயிலுக்கு வான்சிரித்தால் தோகை ஆடும்
      மாந்தருக்கு நீசிரித்தால் ஓகை கூடும்;
பயமுறுத்தி இடியிடிக்கும் மின்னல் வீசும்
      பார்மகிழ மழைபொழியும் வான்சி ரித்தால்;
துயருறுத்த வருபகையை இடித்து மின்னிச்
      சொல்மாரி நனிபொழியும் நீசி ரித்தால்.