மனிதரைக் கண்டு கொண்டேன் | 249 |
முதல்வர்கரு ணாநிதிஎன் றுணர்த்து கின்ற முத்திரைதான் அவ்வெழுத்து; மெய்யெ ழுத்தின் முதலெழுத்தும் நீதானே; உயிராம் அண்ணா முதலெழுத்தும் உன்னுடன்தான் இணைந்தி ருக்கும். பிணியுற்ற தமிழினத்தைப் பிழைக்க வைக்கப் பெரியாராம் மருத்துவரோ அறுவை செய்தார்; தணியட்டும் பிணியென்று மருந்தை அண்ணா தந்திரமாக் கூட்டுக்குள் அடைத்துத் தந்தார்; துணிவுற்ற திருமணத்தோய்! நீயோ அந்தத் தொழிலுடனே வலிக்காமல் ஊசி போடும் பணிகற்றாய்; பெயர்பெற்றாய், சித்தர் சொன்ன பச்சிலையும் மூலிகையும் கற்றுக் கொண்டாய். மருத்துவனே பிணியகன்ற மாந்தர் நின்றன் மருத்துவத்தின் திறங்கண்டு மகிழ்வு கொண்டு வருத்தமற வாய்விட்டுச் சிரித்தார்; நீயும் வளர்தமிழ்ச்சொல் வருவாயால் சிரித்து நின்றாய்; சிறுத்தமதி படைத்தவரோ அதனைக் கண்டு சிந்தைஎலாம் அழுக்காறு வளர்த்து நின்றார்; திருத்தமுற மருத்துவத்தைக் கல்லார் இங்குத் திரிகின்றார் மருத்துவர்போல் எனச்சி ரித்தாய்; முடியரசன் எனும்பெயரைப் பூண்டி ருந்தும் முடியிழந்து நிற்கின்றேன்; நீயும் இன்று முடியிழந்து நிற்கின்றாய்; ஆனால் என்போல் முடி ஒன்றும் நரைக்கவில்லை; யாண்டுப் பெற்றாய்? இடியனைய துயர்வந்து தாக்கும் போதும் இடியாமல் சிரிப்பதனால் பெற்றாய் போலும்! முடியிழந்து நின்றாலும் மன்னா நின்றன் முகத்தழகு சிரித்துவிளை யாடக் கண்டேன். |