பக்கம் எண் :

250கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

‘சிரிப்பென்னும் மருந்துண்டேன் அம்மருந்தைச்
      சித்தர்திரு வள்ளுவனார் தந்தா’ரென்று
உரைக்கின்றாய் நெஞ்சுக்குள் என்செ விக்குள்
      ஒருசிறிது விழக்கேட்டேன்; குறள்நூல் சொல்லி
விரிக்கின்ற பொருளனைத்தும் விரித்துச் சொல்லி
      விளக்கிவரும் புலவன்நான்; எனினும் இன்னும்
வருத்திவரும் கலைக்கு மருந்து கண்டு
      வாழ்வதற்குக் கற்கவில்லை; கலைஞன் நீதான்.

ஒருதுயரம் வந்தாலும் உள்ளம் வாடி
      ஒடுங்குகின்றேன் சிரிப்பதற்கோ இயல வில்லை;
வருதுயரம் எதுவெனினும் நிமிர்ந்து நின்று
      வாய்விட்டுச் சிரிக்கின்றாய் கலக்க மின்றி;
கருணைநிதி கலங்கிவிடின் கழகத் தோழர்
      கலங்குவரே எனஎண்ணி மறைக்கின் றாயா?
வருபவைதாம் வரட்டுமெனை நாட்டுக்காக
      வழங்கி விட்டேன் எனஎண்ணிச் சிரிக்கின்றாயா?

அறுசமயம் பிறசமயம் வெறுப்ப வன்தான்
      ஆனாலும் அன்பழகற்(கு) அருகன் ஆனாய்;
பிரிவுதரும் சாதிக்குப் பகைவன் தான் நீ
      பிழையறியாச் சாதிக்கு நண்பன் ஆனாய்;
‘உறுதியுடன் விடுதலையைப் பெற்று விட்டோம்
      உரிமையுள தென்னரசும் உடையோம்’ என்று
முரசொலியை முழக்குகின்றாய் ஆனால் இந்த,
      முடியரசன் பாட்டுக்குள் கைதி ஆனாய்.

சிவபெருமான் குறைமதியைத் தலையில் வைத்தான்;
      சிந்தனையால் நிறைமதியைத் தலையில் வைத்தாய்;
சிவபெருமான் தலைமதியன்; நீயோ என்றும்
      சிரிக்கின்ற முகமதியன்; அற்றை நாளில்