மனிதரைக் கண்டு கொண்டேன் | 253 |
அம்புவிடும் வில்லாளன் இராமச் சந்த்ரன் அரும்பிவரும் புன்முறுவல் பூத்து நின்றான்; நம்பியவள் மூக்கறுத்தான் தம்பி; வாயில் நகைதவழச் சிரித்திருந்தான் அண்ணன் என்றே; தம்பிகரு ணாநிதியின் ஆட்சி கண்டு தவறாகக் கண்வைத்தார் நேரு செல்வி; வம்புகளை இழைத்திருந்தார்; குறும்பும் செய்தார்; வஞ்சமனங் கொண்டவரைத் தஞ்சை மண்ணை நம்பியிங்கு வந்தவரை மூக்கறுத்தார் நாடாளும் முதலமைச்சர் இராமச் சந்த்ரன்; நம்பியவர் மூக்கறுத்தார் அண்ணன்; வாயில் நகைதவழச் சிரித்தாய்நீ தம்பி இன்று. சிரிக்கின்ற முகம்வாழ்க, தமிழை என்றும் சிந்திக்கும் அகம்வாழ்க, பகைகள் காணின் நெரிக்கின்ற புருவங்கள் இனிது வாழ்க, நீள்நிலத்தைச் சுமக்கின்ற தோள்கள் வாழ்க, குறிக்கின்ற குறிதவறாப் பார்வை கொண்ட குளிர்விழிகள் வாழியநின் கொற்றம் வாழ்க, இருக்கின்ற எமக்கெல்லாம் துணையே வாழ்க எமதுயிரின் உடன்பிறப்பே என்றும் வாழ்க. திருவிடத்தின் இனவுணர்வுக் காப்பி யத்தைத் தெளிவுபெற எழுதியவர் பெரியார்; அந்தப் பொருளெடுத்து விளக்கவுரை எழுதித் தந்து புத்துணர்வை ஊட்டியவர் அறிஞர்; மக்கள் மருளொழிய, அறிவொளிகள் பரவி நிற்க, மானமிகு காப்பியத்தைக் கற்றுத் தந்து வருபவர்தாம் நம்கலைஞர்; இந்த ஆசான் வாழ்கவென வாழ்த்துவது கடமை யன்றோ? |