| 254 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பேருருவ மரங்களையும் தன்னுள் கொண்ட பெருமைகொளும் வித்தானார் பெரியார்; எங்கள் பேரறிஞர் அவ்விதையில் முளைத்தெ ழுந்த பேரால மரமாக விளங்கி நின்றார்; பாரறிய அதுபடர்ந்து நிற்கும் போது பக்கத்து விழுதாக நின்று காக்கும் வீறுடையார் நம்கலைஞர் அன்றோ? அந்த விழுதுக்கு நன்றிசொலி வாழ்த்தி நிற்போம்; இனவுணர்வுச் சிந்தனையாம் அருவி வெள்ளம் ஈரோட்டுப் பெருமலையில் தோன்றிக் காஞ்சி மனவுணர்வில் வற்றாத ஆறாய் ஓடி, மாநிலத்தார் நெஞ்சகத்தை நன்செய் யாக்கிக்; கனவுகளை நனவாக்கி வருதல் கண்டோம்; கார்குலவி நீர்பொழியும் ஆரூர் நெஞ்சம், புனல்பெருகும் ஆற்றுக்குக் கரையாய் நிற்கும்; பொழுதெல்லாம் காத்திருக்கும்; வாழ்க நெஞ்சம். காப்பியத்தைக் கற்பிக்கும் ஆசா னாகிக், கருத்துநிழல் பரப்புகின்ற ஆலம ரத்தைக் காப்புறுத்தத் தாங்குகிற விழுதும் ஆகிக், களமனைத்தும் வளப்படுத்தும் ஆற்றைக் காக்க யாப்பமைந்த கரையாகிக், கழகம் காக்கும் யாளிக்கு நிகராகும் கலைஞர் தம்மை நாப்புலத்தால் மனப்புலத்தால் வாழ்த்தி நிற்போம் நாம்வாழ எந்நாளும் போற்றி நிற்போம். (இலக்கிய அணி, சென்னையில் 2.6.79 அன்று எழிலுற நடத்திய கலைஞர் விழாவில் - கவினுறு பாவரங்கத் தலைமை ஏற்றுப் பாடினார் கவியரசு முடியரசனார்! அவர் படைத்த தமிழ் விருந்து ஈண்டு காண்க! “அழகின் சிரிப்பில் கலைஞர்” என்பது பாவரங்கத் தலைப்பு) |