பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்257

28
முறுவலிக்கும் இளையவனே

சுறுசுறுப்பின் வார்ப்படமே சூடுதரும்
      அரசியலைச் சொல்லும் ஏடே
விறுவிறுப்புச் சொற்போரில் விளையாடும்
      கூர்வாளே வேதப் போக்கால்
கிறுகிறுத்த தமிழினத்தின் கேடகற்றி
      மேலுயர்த்துங் கிழவா என்றும்
முறுவலிக்கும் இளையவனே முத்தமிழ்தேர்
      மு.க.வே. உடன் பிறப்பே....

அன்றொருநாள் ஆட்சிபெறும் ஆணவத்தார்
      உனைச்சிறையில் அடைத்து வைத்தார்
என்றறிந்த நல்லினைஞர் எரியூட்டித்
      தமதுடலை எரித்துக் கொண்டார்;
ஒன்றிரண்டா? அம்மாவோ ஒப்தின்மேல்
      எண்ணுடையார்; உலகில் எங்கும்
என்றுமொரு தலைவர்க்கும் இல்லாத
      பெருமையை நீ ஏற்றாய் ஐயா!

புகழ்மொழியால் நண்பர்யார் புகுகின்ற
      பகைவர்யார் புரிய வில்லை;
இகழ்மொழியும் புகழ்மொழியும் இரண்டுமொரு
      நிகரெனவே எண்ணி நின்றால்,
பகைபுக ஓர் வழியில்லை; பணிதொடர
      இடரில்லை; பழகி என்னை
வகை தெரிந்து கொண்டவன்நீ வாய்மொழியை
      மனங்கொள்க வாழ்க நன்றே.