258 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
29 வாழிய தமிழரசு இந்நாட்டு வரலாற்றை நோக்குங் காலை இருந்தவரும் புகுந்தவரும் ஆண்ட நாளில் பொன்காட்டிப் பொருள்காட்டிப் புகழுங் காட்டிப் பொருதவர்தம் புறங்காட்ட மறமுங் காட்டித் தந்நாட்டை வளமுறுத்த வழிகள் காட்டித் தனியாட்சி நடத்திவந்தார் மன்னர் என்று பொன்னேட்டில் பொறித்துளதைக் கண்டோம் அன்று புதியதொரு வரலாற்றைக் கண்டோம் இன்று. அன்றிருந்த மன்னரெலாம் செங்கோல் ஏந்தி ஆண்டிருந்த அந்நாளில் மன்ப தைக்கு நன்றுணர்ந்து செய்தபெரும் நன்மையெல்லாம் நாலைந்தும் ஆறேழும் என்ற எண்ணுள் நின்றிருக்கும்; அதன்மேலும் ஒன்றி ரண்டு நிகழ்ந்தாலும் நிகழ்ந்திருக்கும்; பகையும் போற்ற இன்றிருக்கும் அரசுசெயும் நன்மை மட்டும் எண்ணுக்குள் அடங்காமல் நீண்டி ருக்கும். பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை எய்தின் படுதுயரில் அவர்குடும்பம் வீழா வண்ணம் அணுகியதன் தலைவிதியை அழித்துக் காக்க அரியதொரு விதியெழுதும் அரசு கண்டோம்; மணிவிழியின் ஒளிமயங்கிக் கலங்கி நொந்து மாற்றரிய வழியின்றித் தவித்து நிற்போர் அணியணியாய் வந்துவிழி பெற்றுச் செல்ல அவர்தமக்கு வழிகாட்டும் அரசு கண்டோம். |