பக்கம் எண் :

260கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

புதுவாழ்வு தரவந்த காந்தி யண்ணல்
      போற்றியநற் கொள்கைகளை நெஞ்சிற் கொண்டு,
விதிதானே தொழுநோயர் துயருக் கெல்லாம்
      விதைஎன்ற சொல்மாற்றி வாழ்வு தந்து,
மதிவாழும் துணிவோடு கருணை வாழும்
      மனங்கொண்ட அருட்செல்வர் ஆளும் ஆட்சி
இதுபோல வேறுண்டா? யாண்டும் இல்லை;
      என்றென்றும் இவ்வரசு வாழ்க என்போம்.

பூவின்றிப் பொட்டின்றிக் கழுத்தில் கையில்
      பூணுகின்ற அணியின்றிச் சுவைகள் உண்ண
நாவின்றி எதிரில்வரத் தகுதி யின்றி
      நலமெல்லாம் பெறலின்றி நெஞ்சுள் நாளும்
கோவென்று கூவிஎழிற் கோதை மார்கள்
      கொழுநர்தமை இழந்தமையால் வாழ்வு கெட்டுச்
சாவென்று வருமென்று நொந்து நொந்து
      சலித்திருந்து நடைப்பிணமாய்க் கிடந்து ழன்றார்.

உற்றாரும் பெற்றாரும் கைம்மை யுற்ற
      உயிர்ச்சிலையைக் கண்டுமனம் உருகி நிற்பர்;
‘மற்றாரும் விலக்கரிய தலையெ ழுத்து
      மாதிவட்கு வாய்த்தவிதம் கொடுமை’ என்பர்;
கற்றாரும் மற்றாரும் விதியை நம்பிக்
      காலத்தைக் கடத்தினரே யன்றி யந்தப்
பொற்பாவை வாழ்வுக்கு வழியைக் காணப்
      புரியாமல் மதிமயங்கி வாழ்ந்து வந்தார்.