பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

அறிவியலே வளராது; களைக ளாக
      அறியாமை மண்டுமெனக் கண்டு கொண்டார்;
“நெறிவிலகி வந்துவிட்டோம்; கற்பா றைக்குள்
      நெற்பயிரா விளையும்?”என ஒதுங்கி விட்டார்

சிந்தனைக்கு வளர்ச்சிதரும் இதழ்கள், நல்ல
      சீர்திருத்தக் கொள்கைதரும் இதழ்கள், ஆயும்
புந்திக்கு விருந்தளிக்கும் இதழ்கள், போற்றும்
      பொதுமைக்கு வழிவகுக்கும் இதழ்கள் விற்க
முந்திக்கொண் டிங்கெழுந்து காலைப் போதில்
      முனைப்போடு கடைவிரித்தார்; மாலை எனும்
அந்திக்குள் திறந்தகடை மூடி விட்டார்
      அவைகொள்வா ரில்லாத கார ணத்தால்

நல்லறிவைப் பதப்படுத்தும் பருவத் துள்ள
      நம்மிளைஞர் இவற்றையெலாம் புறக்க ணித்துப்
புல்லுணர்வைக் கிளறிவிடும் இதழ்கள் வாங்கிப்
      போற்றுவிரேல் அறிவுநுனி மழுங்கிப் போகும்;
அல்வழியில் மனஞ்செல்லும்; பண்பு தேயும்;
      அருமைமிகும் இளம்பருவம் கருகி வீழும்;
கல்வியது சருகாகிக் காற்றிற் போகும்;
      காளையர்தம் பிஞ்சுள்ளம் வெம்பி வீழும்.