11 பெற்றவர் தூங்கினால்.......? கற்று வரச்சொல்லிப் போக்கினீர்- மக்கள் கற்றன ராவெனப் பார்க்கிலீர் குற்றம் இழைத்திட நாடுவார்- கல்விக் கூடங்கள் தாக்கிடக் கூடுவார் செற்றமு டன்கலாம் செய்யவோ?- அங்குச் சென்றனர் பிள்ளைகள் ஐயவோ! பெற்றவர் இப்படித் தூங்கினால்- நாளை பின்விளை வென்னென்ன வாகுமோ? மங்கையர் ஏகிடக் கூசுவார்-கற்கும் மாணவர் அப்படிப் பேசுவார் எங்கணும் தேர்வுகள் காணுவோர்- நெஞ்சில் ஏக்கம் மிகுந்திட நாணுவார் தங்கும் இடங்களில் போர்க்களம்- ஊர்தி சார்ந்திடும் போதிலும் போர்க்களம் இங்கிவர் இப்படி ஏகினால்- நாளை எப்படி எப்படி யாகுமோ? கண்டனம் இன்மையால் நேர்ந்ததோ -கல்விக் கட்டணம் இன்மையால் சார்ந்ததோ? சண்டை இடுங்கட்சி புக்கதோ- அன்றித் தானெனும் ஆணவம் மிக்கதோ? கண்டுளம் வேதனை கொள்கிறேன்- இந்தக் காளையர் வாழ்ந்திடச் சொல்கிறேன் மண்டிய தீமைகள் ஓங்குமே- பெற்றோர் மற்றவர் போலினுந் தூங்கினால். |