கொத்தாகி வரும்மொழியின் கூட்டத்தை நும்முன்னர்க் கொட்டு கின்றேன் *எத்தாலும் பழிகளுமக் கேற்படுமேல் எனையுமவை சாரு மன்றோ? பேசுங்கால் எழுதுங்காற் பிழைமலியக் காண்கின்றேன்; பிறழ்ந்து நாவை வீசுங்கால் வரையுங்கால் வீணாவர் மற்றவரும்; விளைவைக் கண்டு கூசுங்கள்; மாசுங்கள் மாதமிழ்க்குச் சேர்க்காதீர்; கோல வாழ்விற் காசுங்கள் குறிக்கோளா? கசடறுதல் குறிக்கோளா? எதற்குக் கற்றீர்? நாட்டவரைத் திருத்துதற்கு நல்லுரிமை பெற்றவர்நீர் நலிதல் நன்றோ? வேட்டெழுந்து மற்றவரா விளக்கியுமைத் திருத்துவது? வெட்கம்! வெட்கம்! நாட்டமுடன் முயன்றுரிய நலங்களெலாம் தகுதியெலாம் நயந்து கொள்க *கோட்டமது தவிர்த்திடுக கொண்டிருக்கும் பொறுப்புணர்ந்து கொண்டாற் போதும். இனவுணர்வை ஊட்டுவதும் மொழியுணர்வை ஏற்றுவதும் யார்பொ றுப்பு? மனவுணர்வில் ஈருணர்வும் மதியுடையீர் நும்மிடமே வதிதல் காணேன்; சினவுணர்வு கொள்ளாதீர்; சிறந்தபணி நமதன்றோ? சிந்தித் தாய்க; எனவுமைநான் வேண்டுகின்றேன்; இனியேனும் பொறுப்புணர்க ஏற்றங் காண்க.
*கோட்டம் - வளைவு, குறைபாடு |