4 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
உலகப் பொதுமறையாம் திருக்குறளை வழங்கிய நாடு; இன்னும் நூற்றுக்கணக்கில் நீதி நூல்களை உருவாக்கிய நாடு; உள்ளத்தாற் பொய்யாதொழுகிய காந்தியடிகளை அருளிய நாடு; சான்றாண்மை என்னும் சொல்லுக்கே இலக்கியமாக நின்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வை ஈன்ற நாடு. சமுதாயச் சீர்திருத்தத்திற்காகவே வாழ்நாள் முழுதும் பாடுபட்ட பெரியார் பிறந்த நாடு; இன்னா செய்தார்க்கும் அவர் நாண நன்னயம் செய்த பேரறிஞர் அண்ணா தோன்றிய நாடு; இன்னும் எத்தனையோ சான்றோர்களைப் பெற்றெடுத்து, அதனாற் பெருமை கொண்ட நாடு, இற்றைநாள் மாந்தரின் இழிசெயலால் பழிக்குள்ளாதல் முறையோ? கயமைகள் என்று தொலையும்? அறிவுக் கண்கள் எப்பொழுது திறக்கும்? நாடு எந்நாள் திருந்தும்? தனித்து உண்ணாதவர், முனிவில்லாதவர், துஞ்சாதவர், அஞ்சுவது அஞ்சுபவர், புகழெனின் உயிருங்கொடுப்பவர் பழியெனின் உலகு வரினுங் கொள்ளாதவர். அயர்வில்லாதவர், தமக்கென முயலாதவர், பிறர்க்கென முயல்பவர் என்றின்னோ ரன்னர் ‘உண்மையால் உண்டாலம்ம இவ்வுலகம்’ என இயம் பினான் இளம்பெருவழுதி. ‘எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என அருளினார் அவ்வையார். பண்பு டையார்ப் பட்டுண் டுலகம் என வாய் மலர்ந்தருளினார் வள்ளுவப் பெருந்தகை. இத்தகைய நன்னெறிகளை யெல்லாம் நவின்றவன்தான்; நன்குணர்ந்தவன் தான்; ஆனால் இன்று?............ உருவத்தால் மனிதனாகி, உள்ளத்தால் விலாங்காகித் தானே திரிகின்றான். ஆடவர் பெண்டிர், இளையர் முதியோர் எவரும் விதிவிலக்கல்லர். அதிலும் குறிப்பாக நாளைய உலகை உருவாக்கும் மாணவர் உலகம் தம்மை மறந்து. நாட்டை மறந்து மயக்குற்ற நிலையில் திரிவதையே காண்கிறோம். எங்கெங்கு நோக்கினும் அங்கங்கே நேர்மை நெளிந்து கிடக்கிறது; நாணயம் நலிந்து கிடக்கிறது; ஒழுங்கு மழுங்கிக் கிடக்கிறது; தூய்மை துவண்டு கிடக்கிறது; சுருங்கக் கூறின் மனச்சான்றே மறைந்து கிடக்கிறது. ‘புண்ணிய பூமி’ என்று இந்த நாட்டுக்குப் பெயர்! ஒரோ வழி நன்மாந்தரைக் காணல் கூடும். எனினும் யாது பயன்? கடலிற் கரைத்த பெருங்காயந்தானே? |