இவ்வாறு நேர்மை முதலியன குறைந்து, பண்பாடுகள் மறைந்து மக்கள் மாறிவரும் நிலைமையைக் காணும் பொழுதெல்லாம் நினைந்து நினைந்து உருகி உருகி, நெஞ்சம் குமுறுவதுண்டு. அக்குமுறலின் வெளிப்பாடே இத்தொகுப்பிற் காணப்பெறும் கவிதைகள். நடுவுநிலைமையில் நின்று நாட்டைப் பார்க்கிறேன் நாட்டைச் சுற்றிக் குற்றங்களும் குறைபாடுகளும் முற்றுகையிட்டுக் கிடப்பதைக் காணுகிறேன். அவை கடியப்பட வேண்டுமென் பதற்காகக் கண்டிக்கிறேன். அக்கண்டனத்தில் என் நண்பர்களும் சிக்கலாம்; அதற்கென் செய்வது? கண்டனத்துக் குள்ளானோர் வருந்துவர் என்பதையும் அறிவேன். மாணவன் வருந்துவானே என்பதற்காக ஆசானும், மகன் வருந்துவானே என்பதற்காக அன்னையும் கண்டிக்காமல் இருந்துவிடின் நிலைமை என்னாவது? குமுகாயம், மண்புக்கு மாயுமே என்று குமுறும் எனது நெஞ்சம், கடமையைச் செய்யத் தூண்டுகிறது. எனது கடமையை நான் செய்கிறேன்.பிறரை வருத்த வேண்டு மென்பதற்காக எழுதவில்லை; அவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன். கண்டனத்தால் அவர்தாம் வருந்துவது உண்மை யானால். அவர்தம் செயலால் உலகம் வருந்துகிறதே அதற்கென் செய்வது? “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்” ஆதலின் தம்மைப்போற் பிறரையும் எண்ணித் தவறிழைக் காது தம்மால் இயன்ற அளவு நன்மை செய்க. பொது நலம் புரிக. ஒல்லும் வகையால் அறவினை ஆற்றுக! நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தலை அகற்றுக; நேர்மை பேணுக; மக்கட்பண்பு காத்து மக்களென வாழ்க! நாடு வாழும். மக்களாட்சி மலர்ந்து உண்மையில் மணம் பரப்பும். நாமும் நல்வாழ்வு துய்ப்போம். காரைக்குடி  அன்பன் 7-10-1985முடியரசன் |