பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

படுக்கையிற் கிடப்பார் தம்மைப்
      பாவிகள் படுத்தும் பாடு
நடுக்கமே கொள்ளச் செய்யும்
      நலிந்தவர் யாது செய்வர்?

விலையுயர் மருந்த னைத்தும்
      வேறிடம் பறந்து போகும்
இலைகறி காய்க ளெல்லாம்
      எங்கொங்கோ சமைய லாகும்
அலைவுறும் பிணியோர் இங்கே
      அலையுறுந் துரும்பாய் நிற்பர்
நிலையிது காணுங் காலை
      நெஞ்சினிற் கனலே மூளும்.

மருத்துவர் வீட்டிற் கேகி
      வைப்பதை வைத்து விட்டால்
திருத்தமாக் கவனம் வைப்பர்
      பிணிகளும் தீர வைப்பர்
நரித்தனத் தாதி மார்கள்
      நாடகம் ஆடும் முன்பே
அரித்திடும் அவர்தம் கையில்
      அதைஅதை வைத்தல் வேண்டும்

பண்டுவப் பணிதான் பாரில்
      ஒப்பிலாப் பணியாம்; நன்மை
கண்டவர் கடவு ளென்றே
      கைதொழு தவரை யேத்திக்
கொண்டுளம் மகிழ்வர்; மக்கள்
      கும்பிடுந் தொழிலைத் தம்பாற்
கொண்டவர் ஈது ணர்ந்து
      கொள்வரேற் குறைக ளேது?