பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே47

18
கையூட்டுலகம்

உலகிலே கையூட் டில்லா
      ஓரிடம் உண்டா? எங்கும்
நிலவியே படர்ந்த டர்ந்து
      செழித்துயர் நிலையில் நிற்கும்;
வலிவுறும் அஃதின் றாமேல்
      வாழ்க்கையே இயங்கா திங்கே;
கொலைகளும் மறைந்து போகும்
      கொடுத்திடுங் கையூட் டாலே.

இழிவெனக் கையூட் டேற்றல்
      எண்ணினர் அற்றை நாளில்;
அழகெனக் கருது கின்றார்
      அனைவரும் இற்றை நாளில்;
பழியெனப் பேசி, வாங்கக்
      கூசினர் பழைய மாந்தர்
தொழிலது சரியே என்று
      சொல்லுவர் புதிய மாந்தர்.

அரசுசார் அலுவல் மன்றம்,
      அருங்கலை வளர்க்குஞ் சாலை,
புரையிலா நீதி மன்றம்,
      புனிதமோ டேத்துங் கோவில்,
சிறையுறுங் காவற் கூடம்
      எங்குமே சென்று வெற்றி
தருவது கையூட் டாகும்
      தடுப்பவர் எவரு மில்லை.