பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே49

19
பூக்களிற் புழுக்கள்

சேர்ந்தொரு கட்சி சொல்லித்
      தேர்தலில் நிற்பார் தம்மை
ஓர்ந்துணர் ஆற்ற லின்றி
      உவப்புடன் வாக்க ளித்துத்
தேர்ந்தெடுத் தாட்சி மன்றுட்
      சென்றிட வழிவ குத்தோம்
போந்ததும் வேறு கட்சி
      புகுந்திட மோப்பம் பார்ப்பர்

*ஆசற்ற தூயர் போல
      ஏய்ப்புரை யாற்றிப் பின்னர்
ஆசைக்கே அடிமை யாகி
      அவர்நிலை மறந்தா ராகிக்
காசுக்குத் தம்மை விற்கும்
      கயவராற் சட்ட மன்றம்
மாசுக்குட் படுமே யன்றி
      மாட்சிமைக் காட்ப டாது

கொள்கையின் மேன்மைக் காக
      மாறிடிற் குற்ற மில்லை
கொள்ளையை மனத்திற் கொண்டு
      கொம்புகள் தாவிச் சென்றால்
‘எள்ளலுக் குரிய ரானார்
      இழிகுணம் படைத்தா’ரென்றே
**அள்ளலில் எறிவ தன்றி
      அவரையார் மதிப்பா ரிங்கே?


*குற்றமற்ற **சேறு