பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே51

நேர்மையை நினையா ராகி
      நீதியை மதியா ராகித்
தேர்விளையாடு கின்றார்
      தெருவிடைச் சிறுவர் போலே.

‘நாட்டினை உயர்வு செய்யும்
      நல்லதோர் நினைவை நீக்கி
வீட்டினை மேம்ப டுத்தும்
      வீணர்க்கா வாக்க ளித்தோம்?
கேட்டினை வளர்ப்ப தற்கா
      வாக்கினைக் கெடுத்து விட்டோம்?’
நாட்டினர் இவ்வா றெண்ணி
      நலிவதைக் காணு கின்றோம்

மக்களை மக்கள் ஆள
      வகுப்பதே மக்க ளாட்சி
மக்களை மக்கள் ஏய்க்கும்
      மாண்பையே காணு கின்றோம்;
இக்குறை தீர்வ தென்றால்
      எவரிடம் போயு ரைப்போம்?
தக்கவர் ஆள்வோ ரானால்
      தழைத்திடும் மக்க ளாட்சி

பணத்தினால் வாக்கைப் பெற்றுப்
      பதவியில் அமர்ந்த பின்னர்ப்
பணத்தினைக் குறிக்கோ ளாக்கிப்
      பழிகள் தாம் செய்வ தென்றால்.
குணத்தினைக் கொன்று வீழ்த்தல்
      குடியர சாட்சி யென்றால்
மணத்துடன் உலக மெங்கும்
      வாழிய மக்க ளாட்சி