பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

20
ஏச்சு மேடை

அரங்கேறிப் பேசுகின்ற அரசியலின்
      சார்பாளர் அறிவின் பண்பின்
திறங்காணும் படிபேசிச் செவிகுளிர
      மனங்குளிரச் செய்வ துண்டு;
தரங்கூரும் அந்நிலையர் தமிழறிந்தோர்
      சிலரானார் தமிழ கத்தில்
புறம்போகும் பேச்சாளர் புல்லறிவர்
      பலரானார் புழுக்கள் போலே.

அரசியலின் நுணுக்கங்கள், ஆக்கவழித்
      திட்டங்கள், அண்டை நாட்டில்
பொருளியலில் வளர்முறைகள், புதுமுறையில்
      தொழில்வளர்ச்சி, பொதுமை நோக்கம்
விரவிவரும் உளப்பாங்கு, வேத்தியலின்
      வரலாறு விளக்கிக் காட்ட
உரியவரா பேசுகின்றார்? ஓரளவும்
      விளங்காதார் உளறு கின்றார்.

பண்பாட்டின் சிறப்பியல்பு, பகுத்தறிவு
      விளக்கங்கள், படிப்பின் மேன்மை,
மண்மேட்டில் உழன்றுவரும் மக்களுக்கு
      மறுவாழ்வு வழங்குந் திட்டம்,
கண்போலும் கல்விவளர் கழகங்கள்
      உருவாக்கிக் காட்டல் எல்லாம்
எண்போட்டுக் காட்டாமல் ஏதேதோ
      குழப்புகின்றார் ஏசு கின்றார்.